search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் கல்லூரி மாணவர்கள்"

    புயல் பாதித்த பகுதிகளை சேர்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். #GajaCyclone
    ஓமலூர்:

    சேலம் விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அங்கே பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்துள்ள பகுதிகளை சேர்ந்த அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்திவிட்டனர். தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    துணை வேந்தர் பதவி காலியாகும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக துணை வேந்தர் நியமிக்க முன்கூட்டியே ஆய்வு கமிட்டி அமைக்கப்படும். அதன் மூலம் உடனடியாக துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.


    இதேபோன்று காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் மற்றும் இதர பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றுகள் கொடுத்து பேராசிரியர் பணியிடங்களில் உள்ளோர் மற்றும் இதர பலகலைக்கழகங்களில் போலி சான்றுகள் மூலம் பணியாற்றுவோர் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. போலி சான்றுகள் கொடுத்து ஆசிரியர் பணியில் உள்ளவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KPAnbazhagan

    ×